சுயநல சிந்தனையுடன்

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன்.
"உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான்.

விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார்.

வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான்.

"இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே.

போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான்.

'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார்.

அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக "சுயநல சிந்தனையுடன்" இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

மனக்கவலை

ஒரு ராஜா.

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.

ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் அமைச்சர்.

‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?’ அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.

கடைசியாக அரசன் கேட்டான்…

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.

அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை’ என்றார் குரு.

அப்படி என்ன செய்திருப்பார் குரு?

நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’

சொல்லாதே

மலைப்பகுதியில் தனியாய் குதிரைமீது பாடல்கள் பாடியபடி வந்து கொண்டிருந்தார் ஜென் ஞானி.
மாலையாகிவிட்டது. இருட்டத் துவங்கிவிட்டதால் தூரத்தில் வருவது யார் என்று பார்க்கக் கடினமாயிருந்தது. அருகில் எந்த ஊரோ, கிராமமோ தென்படவில்லை.

அந்த வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்த ஜென் ஞானி, தன் முன்னால் யாரோ மயங்கி ரோட்டோரமாகக் கிடப்பதைப் பார்த்தார். உடனே குதிரையை நிறுத்தினார்.

மூச்சு இருக்கிறதா? என்று பார்த்து அந்த நபருக்கு முதலுதவி செய்து குதிரையின் மேலேற்றி அமர்த்தினார். `சீக்கிரம் இவரை ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்று யோசித்தபடி... மயங்கியவரை `நன்றாக அமர்ந்துவிட்டாரா, கீழே விழமாட்டாரா' என்று ஒருமுறை உறுதி செய்துவிட்டு, `சரி நாமும் ஏறலாம்' என்று நினைத்து ஏற எத்தனித்தார்.

அதுவரை மயங்கிக் கிடந்தவர் எழுந்துகொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துச் சுண்டினார். சீறிப் பறந்து ஓட, திகைத்து நின்றார். அவன் மயங்கியவனல்ல. அவன் மயங்கியவன் போல நடித்த ஒரு திருடன்.

`அவ்வளவு நேரம் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட எனக்குப் புரியவில்லை. இது எவ்வளவு பெரிய வேடிக்கை...' என்று நேற்று இரவு நடந்த திருட்டுச் சம்பவத்தால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் பேசினார் குரு. இந்த நிகழ்ச்சியில் தங்களின் குருவை ஆச்சரியமாய்ப் பார்த்த சீடர்களில் ஒருவர் கேட்டார்.

``உங்களுக்கு இது பெரிய திகைப்பாக இல்லையா?''

``இருந்தது. ஒரு வினாடி இருந்தது. அப்புறம் சரியாகி விட்டது.''

``எப்படி அது உடனே சரியாக முடியும்?''

``அட! சில மனிதர்களின் சுபாவம் அப்படித்தான். அதான் நடந்தது, நடந்துவிட்டது. மாற்ற முடியாது. இதற்கு மேலும் ஏன் மாற்ற முடியாததை நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிய வேண்டும்!'' என்றார் வெகு இயல்பாக. ஆச்சரியத்தோடு குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க சீடர்களுக்குள்ளும் அதே இயல்பு நிலை மலர ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை வேறு ஊர் நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.

அடுத்த ஊருக்குள் நுழைந்த ஜென் ஞானி, அந்த ஊர் சந்தை வழியாகச் செல்ல நேரிட்டது.

சந்தையில் தங்களுடைய குருநாதரின் குதிரையைப் பார்த்த சீடர்கள், ``அதோ நம் குதிரை'' என்று உற்சாகச் சத்தமிட்டார்கள். குதிரையை விற்பதற்காக நின்று கொண்டிருந்த திருடன் அதிர்ச்சியடைந்தான்.

``அச்சச்சோ எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டோமோ!'' என பதைபதைத்துக் கொண்டிருந்த திருடனின் அருகே சென்ற ஜென் ஞானி, அவனுடைய தோளைத் தொட்டு, கண்களைப் பார்த்து மெல்ல சிரித்தார். திருடன் பேயறைந்து நின்றான்.

திருடனிடம் ``சொல்லாதே!'' என்றார்.

மிரண்டு போன திருடன், ``எது? என்ன? எதைச் சொல்கிறீர்கள்?'' என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.

மீண்டும் சிரித்த சாது சொன்னார். ``அதான் நடந்தது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. மாற்ற முடியாததை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்?. இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள்.

உனக்கு எப்படி இந்தக் குதிரை கிடைத்தது என்பதை மட்டும் யாரிடமும் சொல்லாதே. மற்றவர்களுக்கு இது தெரிந்தால், நிஜமாகவே ஒருவர் மயங்கிக் கிடக்கும்போது கூட உதவாமல் போய்விடுவார்கள். மக்களின் சுபாவம் அப்படி. உன் சுபாவம் இப்படி'' என்று சொல்லிவிட்டுச் சென்ற ஜென் ஞானியைப் பார்த்து, கண்ணீர் வடித்து நின்று கொண்டிருந்தான் திருடன். அழுதபடியே குருவைப் பின் தொடர்ந்தான் திருடன். பிற்காலத்தில் முழுமையாய் மலர்ந்த மிகச் சிறந்த சீடனானான்.

பார்வை

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது.

அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.

அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.

சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.

விடாக்கண்டன்

கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.

ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.

பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.

அவனிடம் கஞ்சனின் மனைவி,”இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,”எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,’அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.’என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.

ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.

திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

இப்போது கஞ்சன் வெளியே வந்து,”இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,”என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,”இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?”என்று கேட்க கஞ்சன் சொன்னான்,

”நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.”

பதினாறு தலைமுறை

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்… ?

பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா…
கணக்கு பிள்ளை பதில் சொன்னார்..
மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ… என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்…??

இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்… ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை…
ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.. அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட.. மன்னனை சந்தித்தார்… மன்னா..

உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டு பிடி..முக்கியம்.. அவள் தினசரி கூலி வேலைக்கு போய்தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்… இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பு.. அப்புறம் என்னிடம் வா..

உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன் என்றார்… மன்னனும் அவ்வாறே செய்ய..
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்… மன்னன் உணவு தானியங்கள் அனுப்பியதை சேவகன் சொல்ல… தன்னுடைய மகளிடம் ” நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என பார்க்க சொன்னாள்… இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா…

சிறுமியின் பதில்… உடனே அந்த இளம் விதவை.. வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது.. இப்போதைக்கு போதும்.. தேவைப்பட்டால் நாங்களே கேட்கிறோம்.. என அந்த வண்டிகளை திருப்பி அனுப்பி விட்டாள்…

யோகி மன்னனிடம் சொன்னார்,.. பார்த்தாயா.. தினசரி வருமானத்திற்கு கூலி வேலை தான் செய்ய வேண்டும்… சம்பாதித்து தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்த பெண்..

இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார்.. ஆனால் நீயோ… பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்…

இதுதான் உன் வியாதி.. இதை மற்றும் மருந்து உன்னிடம் தான் இருக்கிறது….

முடியும்.. முடியும்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.