இந்தப்
பிரபஞ்சத்தில் மானுடன் ஒரு துரும்புக்குச் சமமானவன். ஆனால் அவனோ தன்னை
’யானை’ அளவுக்கு பலம் மிகுந்தவனாக, பெரும் புகழ் படைத்தவனாக, மாபெரும்
வீரனாக, அறிவாளியாகக் கற்பனை செய்து வாழ்கிறான். ஆனால் மிருகங்களுக்கு,
பறவைகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட, ’சுனாமி’ போன்றவை வரும்போது
தன்னைக் காத்துக் கொள்ளும் எச்சரிக்கைத் தற்காப்பு உணர்வு கூட அவனுக்கு
இல்லை. ஆனால் தன்னை மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக அவன் நினைத்துக்
கொள்கிறான். அப்படியே நம்புகிறான். கடைசியில் எல்லாம் மாயைதான் என்பதை
உணரும் போது ஏதாவது கலர் துண்டையோ, கலர் மோதிரத்தையோ அணிந்து தற்காத்துக்
கொள்ள நினைக்கிறான். சாமியார்களின் காலடியைத் தஞ்சமடைகிறான். வெளியே
’இல்லை’ என்றும் உள்ளே ’இருக்கு’ என்றும் சொல்கிறான். வேஷம் போடுகிறான்.
போலி ஆன்மீகவாதியாக, போலி நாத்திகவாதியாக நடிக்கிறான்.
’இல்லை’
என்று சொல்லவில்லை; ’இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றுதான் சொன்னேன் என்று
பசப்புகிறான். கடவுளை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல;
கடவுளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று வார்த்தை ஜாலம் செய்கிறான். “நானாத்திகன்” என்று சிலேடை மொழிகிறான்.
வேண்டுதல் வேண்டாமை இலானிடம் போய் பிடித்திருக்கிறது; இல்லை என்றெல்லாம்
வாதிட முடியுமா என்ன? கடந்து நிற்பதனால் தானே அவன் கடவுள். அவனை அறிய உள்ளே
அல்லவா கடக்க வேண்டும். வெளியே தேடினால் என்ன கிடைக்கும்? அது தெரியாமல்
பிதற்றி என்ன பயன்?
என்னத்தைச் சொல்வது? இப்படி மனிதன் அகத்தைப்
பார்க்காமல் புறத்தை மட்டுமே பார்த்து, அதையே உண்மை என்று நம்பி, தன்னைத்
தானே ஏமாற்றிக் கொள்வதைக் கண்ட ஆதங்கத்தால் எழுந்தது.
ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
தெருக்கூத்து பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டானாம் ஒருவன். எனவே தன்னுடைய
பாயையும் கையோடு எடுத்துக் கொண்டு கூத்து நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
அங்கே கூத்து இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பதை அறிந்து, தன் பாயை விரித்து
அங்கே படுத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான். அவன் கண்
விழித்துப் பார்க்கும் பொழுது கூத்து முடிந்து விட்டிருந்தது. அதனால் வேறு
ஒன்றும் செய்யத் தோன்றாமல், தன் பாயையும் சுருட்டி தன் கையோடு எடுத்துக்
கொண்டு போய் விட்டான்.
பல மனிதர்களின் உலகியல் வாழ்வும்
இப்படித்தான், அனுபவம் பெறுவதற்காக பிறப்பெடுக்கும் அவர்கள், எந்தவித
அனுபவமும் பெறாமல் மீண்டும் மறு பிறப்பெடுக்கச் சென்று விடுகின்றனர்.
அவர்களை கையோடு கொண்டு வந்து விட்டு, கையோடு கொண்டு செல்லும் பாய் தான்
கர்மா!”
கர்மாவைத் தொலைக்க வந்த மனிதன் அந்தக் கர்மாவை மேலும்
மேலும் சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறான். அதிலும் பல தவறான வழிகளில்
சென்று… அவ்வளவு எளிதில் தொலைக்க இயலாத கர்மாவை, தவறு என்று தெரிந்தும்,
மனசாட்சி எச்சரித்தும், அதனை மீறி மூட்டை மூட்டையாக சேர்த்துக்
கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
ஒன்றும் சொல்ல முடியாது.
யாராலும் யாரையும் மாற்ற முடியாது. எழுத்தாலோ, கதையாலோ, கட்டுரையாலோ,
பேச்சினாலோ மட்டும் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. ரமணர்
சொல்வது போல் There is no any short route. அவனுக்கானதை அவனே முயன்றுதான்
அடைய வேண்டும். அதற்குத் தான் இந்த மானுடப்பிறவி. அதற்கு முதலில் அவனுள்
அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அதுவே
முக்கியம்.
எல்லாம் அவன் செயல். அந்த ’அவன்’, இவனே! இதை இவன்
உணர்ந்தால் இவனும் அவனாகலாம். அவனே இவனாக இருக்கும் உண்மையையும் உணர்ந்து
சீவன் சிவனாகலாம்.
No comments:
Post a Comment